மாணவரைத் தத்தெடுங்கள்!

இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் கட்-ஆப் மதிப்பெண் 195-க்கு அதிகம் எடுத்தவர்கள் பொறியியல் படிப்புக்கு 6500 பேர்; மருத்துவப் படிப்புக்கு 7500 பேர். விண்ணப்பங்களும் கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாக விற்றுள்ளன. இது மகிழ்ச்சியைத் தருகிறது என்றாலும், இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் உயர் கல்வியைத் தொடருவதற்குப் போதுமான நிதிவசதி இல்லாதவர்கள் என்பது சுடுகின்ற உண்மை.

வங்கிக் கடன் கிடைக்கும் என்றாலும்கூட, குறைந்தபட்சம் ஐம்பதாயிரம் ரூபாயை முன்னதாகச் செலவழித்த பிறகுதான் வங்கிக் கடனை வாங்கி ஈடுசெய்ய முடியும். ஆனால் அதற்கும் வழியில்லாமல், கலந்தாய்வு நெருங்கிவரும் நிலையில், பல குடும்பங்களின் இரவுகள் தூக்கமின்றி விடிந்துகொண்டிருக்கின்றன.

இந்த நேரத்தில் குஜராத் மாநில காவல்துறை ஒரு நல்ல வழியைக் காட்டியுள்ளது. “மாநிலத்தில் உள்ள 500 காவல்நிலையங்களும், அதிக மதிப்பெண் பெற்றும் உயர்கல்வியைத் தொடர வழியில்லாத ஏழை மாணவர் ஒருவரைத் தத்தெடுக்கும்’ என்று அந்த மாநில காவல்துறைத் தலைவர் எஸ்.எஸ். கந்தவவாலா தெரிவித்துள்ளார். காவல் உயர் அதிகாரிகள் தனிப்பட்ட முறையிலும் தத்தெடுப்பதை ஊக்குவிக்கும் வகையில், தானே ஒரு மாணவரை தத்தெடுத்துள்ளார்.

“இதற்கான செலவை அரசு சாரா நிறுவனங்களின் ஆதரவைப் பெற்று ஈடுசெய்வோம்’ என்றும் கூறியுள்ளார். அடுத்தவர்களிடம் பணம் வாங்கித்தானே படிக்க வைக்கப் போகிறார்கள் என்று எண்ணத் தோன்றும். ஆனால், புரவலர்களை பிடிப்பது எத்தனை சிரமம் என்பதும், இந்த விஷயத்தில் காவல்துறை விரல்அசைவில் விந்தைகள் செய்யும் என்பதும் அறிந்திருப்பவர் யாருமே, காவல்துறையின் இத்திட்டத்தைப் பாராட்டவே செய்வர்.

எல்லா மாநிலங்களிலும், போக்குவரத்துக் காவல்துறைக்குத் தேவையான அனைத்து தளவாடப் பொருள்களையும் அந்தந்த நகர்ப் பகுதிகளில் உள்ள அரசு சாரா, தனியார் நிறுவனங்கள்தான் வழங்குகின்றன. இதேபோன்று ஏழை மாணவரைத் தத்தெடுத்து, அவரது உயர்கல்விச் செலவுக்கு- கல்விக்கட்டணம், விடுதிச்செலவு உள்பட ஆண்டுக்கு சுமார் ரூ.80 ஆயிரம்- பொறுப்பேற்பது காவல்துறைக்கு மிக எளிமையான செயல்.

இதேபோன்று, தமிழகக் காவல்துறையும் அவரவர் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், படிக்க வசதி இல்லாத சிறந்த மாணவர்களைத் தத்தெடுத்தல் இயலாத காரியம் அல்ல. இத்தகைய நற்செயல் காவல்துறையின் மீதான பொதுமக்களின் பார்வையை மாற்றப் பெரிதும் உதவும்.

காவல்துறை மீது குற்றவாளிகளுக்குப் பயமும், பொதுமக்களுக்கு மரியாதையும் இருக்க வேண்டும். தற்போது அந்த நிலைமை தலைகீழாக மாறிவிட்டது என்பதுடன், காவல்துறை என்றாலே ஆளும்கட்சியின் அடியாள் என்ற எண்ணமும் மக்களிடம் ஏற்பட்டுவிட்டது. இதை மாற்ற வேண்டிய பொறுப்பும் சமூகக் கடமையும் காவல்துறைக்கு உள்ளது. இத்தகைய மாணவர் தத்தெடுப்பு திட்டங்கள் காவல்துறைக்குப் புதிய பெருமையை – பொலிவை நிச்சயமாக ஏற்படுத்தும்.இத்தகைய திட்டங்களில் வசதியுள்ள சிலரும் தங்கள் குழந்தைகளை நுழைத்துவிடும் சம்பவங்கள் நடக்கவே செய்யும். ஆனாலும், 90 சதவீதம் மாணவர்கள் உண்மையாகவே ஏழைகளாகவும், சிறந்த மாணவர்களாகவும் இருப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. ஏழை மாணவர்களைத் தத்தெடுப்பதில் காவல்துறை மட்டுமன்றி வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், தொழிற்கூடங்கள் போன்றவையும் ஈடுபடலாம்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு சில வங்கிகள், மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ. 50 கிடைக்க வழிசெய்தன. ஒரு கல்லூரிக்கு ஓரிரு மாணவர்கள் என வரையறை செய்து, கல்லூரிப் பேராசிரியர்கள் பரிந்துரைத்த மாணவர்களை ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் பணியாற்ற வகை செய்தார்கள். பெரும்பாலும், கடன் நிலுவை அறிவிப்புக் கடிதங்கள் எழுதுதல் மற்றும் கடிதங்களைப் பிரித்துக் கோப்புகளில் அடுக்குதல் போன்ற பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டன. இப்போதைய கல்விக் கட்டணங்களைப் பார்க்கும்போது அத்தகைய சிறு பணிகளால் எந்த நன்மையும் ஏற்பட்டுவிட முடியாது. மாறாக, ஒவ்வொரு வங்கிக் கிளையும் ஒரு மாணவரைத் தத்தெடுத்து கல்விச் செலவை ஏற்க முன்வர வேண்டும். வேண்டுமென்றால், அனைத்துப் பருவத் தேர்வுகளிலும் தொடர்ந்து தேர்ச்சி பெற வேண்டும் என்பதை நிபந்தனையாக வைத்துக்கொள்ளலாம்.

விளையாட்டு வீரர்களின் முதுகிலும், தோளிலும், காலிலும், மட்டையிலும் வணிகச் சின்னம் பொறிப்பதற்கு ஆகும் செலவில் ஒரு சிறு பகுதி போதும் – ஒரு மாணவரின் உயர் கல்விச் செலவுக்கு.


Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: