பாதை மறிக்கப்பட்ட நதியே பீறியெழும்!!

பரந்து விரிந்த பூமியின் அகண்ட பெரும்பள்ளங்களை மேவிக்கிடக்கின்ற இந்நீலக்கடல் அள்ளிவந்து எறிந்துபோகும் அலைகளை கால்கட்டி ரசித்தவனாயிருக்கிறேன்.

பகலெல்லாம் வெம்மை பரவி ஆறிக்கொண்டிருக்கும் சாளரத்தின் வழியே ஊடுருவும் பார்வைகளில் சூரியப்பெருநட்சத்திரத்தின் பரிமாணத்தை அளந்தவனாயிருக்கிறேன்.

மலையுச்சியிலிருந்து பெரும் ஓலமிட்டுத் தாழவீழ்ந்து அடர்வனத்தினூடே நெளியும் நதியொன்றின் தீர்க்கத்தை வியந்தவனாயிருக்கிறேன்.

அனைத்துமே சோர்தலின்றிச் சுற்றுதல்கொண்டு செம்மைப்பட வாழ்தலின் அத்தியாவசியமொன்றை உரக்க உரைத்தபடியேயிருக்கிறது.

காலத்தின் நகர்தலுடன் தன்னைப் பிணைத்துக்கொண்ட எந்தவொரு துகளிலும் வாழும்கலையின் சூத்திரம் தன்னிறைந்திருக்கிறது.

என் சிறுகுடிலின் வாசலோரம் அதிகாலை மொட்டவிழ்ந்த வாசமலர்கள் அனைத்தும் வண்ணத்துப்பூச்சிகளின் வருகையை யாசிக்கின்றன.

இயற்கையின் தந்திரம் தனைச்சூழக்கட்டிய கூட்டினுள் விதியென அடங்கிப்போகாது,

முட்டிமோதியுடைத்து வரும் பட்டாம்பூச்சிகளோ தன் வலிகளின் பிரசவங்களை வண்ணங்களாய்ப் போர்த்தி தோட்டப்பூக்கள் முதல் காட்டுப்பூக்கள் வரை அனைத்தையும் கர்வத்துடனே நுகர்ந்து போகின்றன.

முட்டவரும் காளையை திமில் பிடித்தடக்கி அதிலேறி ஏழுகடல் தாண்டி பயணிக்கும் சூத்திர வித்தை அறிந்திருக்கின்றன அவை.

தன்னுயிர்க்காய்த் தாவியோடும் மான்குட்டிகளின் வேகத்திற்கும் சிங்கத்தின் அகோர பசிக்குமான போட்டிகள் ஒவ்வொரு வனாந்திரத்தின் திசைகளெங்கிலும் அரங்கேறியபடிதானிருக்கின்றன.

பாய்ந்து மறையும் ஒவ்வொரு மான்குட்டியிடமும் தோற்றுக்கொண்டேயிருக்கிறது சிங்கத்தின் பசி.

நீர்சூழ பிரசவிக்கப்படும் ஒவ்வொரு மீன்குஞ்சும் அதனுலகில் உயிர்வாழ்தலின் அதிகபட்ச தேவைகளின் தீர்க்கங்களோடே பிறக்கின்றன.

அறிவின் உயர்நிலைப் பரிணாமமாய்ப் பிறவிகொண்ட மனிதனின் ஒவ்வொரு தொடக்கப்புள்ளியும் வெகு ஆதியில் கோடிகளின் முதலொன்றாய்த் அண்டம் துளைத்து உருப்பெற்றவையே.

காலச்சக்கரத்தின் ஓட்டத்தின் பின்னால் வசந்தத்தை நழுவவிடும் ஒவ்வொரு தோட்டமும் பிரிவுதாளாது இலையுதிர்க்கக்கூடும்.

அதன்பின்னொரு குளிர்காலத்தில் மரங்கள் உலர்ந்துபோயிடினும், பெரும்பாலையொன்றில் உலாவும் ஒட்டகத்தின் தொண்டைக்குழி நீரொத்ததொரு பசுமை அதன் அடிமனங்களின் வசந்தத்தின் வருகைக்காய் முனைப்புகளுடன் காத்திருக்கும்.

மீண்டும் மலரும் பெருமண நாளொன்றின் காலடிச்சப்தம் கேட்ட கணத்தில் வீரியங்கொண்ட அப்பசுமையின் ஆண்மை பலவாறாய் முனைந்தெழும்.

வெற்றிக்கனிகள் விளைந்துகிடக்கின்ற மலைதேச அடர்வனத்தைத் தேடிச்செல்லும் சாலையொன்றிலான பயணப்பொழுதில் தன் சார்ந்த நம்பிக்கையின் கரங்கள் சிறகுகளாய் உருப்பெறுகின்றன.

அவை வெற்றியின் புகலிடம் அடைதலின் அதிகபட்ச சாத்தியத்தினூடே வானம் அளக்கின்றன.

முயற்சிகள் சரியான தீர்வுகள் நோக்கியிருக்கும் பொழுதுகளில் தோல்விக்கு தலைதூக்கும் திராணி

சற்றுமில்லை.

முயல்-ஆமை கதைகொண்டும் சொல்லப்பட்டது முயலின் தோல்வியைக்காட்டிலும் முயலாமையின் தோல்வியென்பதை மறுப்பார் யாருமுண்டோ?.

ஆயிரமாயிரம் மைல்கள் சோர்வின்றிப் பறக்கின்ற தேனீக்களே வாழ்வில் இனிமை சேகரிக்கின்றன.

களங்கள் தோறும் சூடிக்கொள்ளும் தோள்களுக்காய்க் காத்திருக்கின்ற வெற்றிகளை தமதாக்கிக்கொள்வதிலேயே இருக்கிறது வாழ்க்கையின் முழுமை.

இறக்கைகளில் வீரியமேந்தி கடல்தாண்டி பயணிக்கும் எந்தவொரு பறவைக்கும் அக்கரையில் சரணாலயமொன்று குளிர்மையின் திரட்சிகள் போர்த்தி வரவேற்பின்பொருட்டு காத்திருக்கிறது.

சேயைச் சூழ்ந்த தாயின் கரங்களொத்து பூமி வேய்ந்த பெருவானத்தின் கீழும், நகரும் காலத்தினை பரைசாற்றி ஊர்ந்துகொண்டிருக்கும் இப்பூமியின் மேலும் வீணென்று எதுதான் படைப்புப் பெற்றிருக்கிறது.

உருப்பெற்ற, உயிர்பெற்ற இப்பேரண்டத்தின் ஒவ்வொரு கூறும் வெற்றிச் சரித்திரமொன்றை தன்னில் தாங்கியே பயணத்திருக்கின்றன.

எல்லா அறிதல்களுடன் காலத்தின் இயக்கத்தை தன்னளவின் முழுமையுடனும் மிகுந்த ரசனைகளுடனும் பார்த்தபடியே வந்திருக்கிறது இயற்கை.

இரண்டாம் உலகப்போரில் அணுநாசங்கண்டு சிதறுண்ட ஜப்பானும், முந்தைய காலத்தில் கைபற்ற எவருமில்லாக் குழந்தைபோலிருந்த சிங்கை, மலேசியாவும் இன்று நம்பிக்கையின் வெற்றிகண்டுதான் தலைநிமிர்கின்றன.

ஒருவனை அதி உயரத்தில் உயர்த்திப்பிடிக்கும்
எந்தவொரு வெற்றியும்
தோல்வியின் உருக்கொண்டே
அவனிடம் வருகிறது.

வெட்டப்பட்ட மரமே வெகுண்டு விளையும்!
பாதை மறிக்கப்பட்ட நதியே பீறியெழும்!!

நன்றி:கோகுலன்

gokulankannan@gmail.com

http://mindpower1983.blogspot.com/

Advertisements

One Response to பாதை மறிக்கப்பட்ட நதியே பீறியெழும்!!

  1. […] பாதை மறிக்கப்பட்ட நதியே பீறியெழும்!! […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: